’பாஜக கைகளில் தமிழர்களின் பெருமையை திமுக அடகு வைத்துள்ளது’ - விஜய் விமர்சனம்!
ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா, கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பின்னர் மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கைப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், சோழப் பேரரசர்களுக்கு திமுக முன்பே முழுமையான மரியாதை அளித்திருந்தால், பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது” என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழையும், தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போல மார் தட்டும் தி.மு.க.. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால், தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”தி.மு.க. அரசானது சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் தமிழர்களின் பெருமையை அடகு வைத்துள்ளது.கீழடியின் ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பேசிவது முழுக்க முழுக்கக் கபட நாடகமே.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் பணிந்து தி.மு.க தனது விசுவாசத்தைக் காட்டி உள்ளது. சேர, சோழ. பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளைப் பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலேயே த.வெ.க. தீர்மானம் இயற்றியது. ஆனால், பவள விழாக் கண்ட தி.மு.க.வோ. பா.ஜ.க. முதுகிற்குப் பின்னால் பதுங்கி கொள்கிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்.