"நான் பெற்ற பிள்ளைக்கு, திமுக பெயர் வைத்துவிட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
நீலகிரியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது, ஆனால் நான்காண்டு காலம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எவ்வித பெரிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது மலை கிராமத்தில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்து மாணவ செல்வங்கள் பட்டப்படிப்பு படிக்க சூழ்நிலையை உருவாக்கிய அரசு அதிமுக அரசு.
அதேபோல் நீலகிரி மக்களின் நீண்ட நாள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். எத்தனையோ அரசாங்கம் வந்தது, ஆனால் எந்த அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை, ஆனால் அதிமுக அரசு நமது நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று உதகையில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியது. உதகையில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க நிலம் வாங்குவதோ, அந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதோ எழுந்த பிரச்சனைகளுக்கு நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டி 50% பணிகளை நிறைவேற்றியது அதிமுக அரசு.
பிறகு ஆட்சி மாற்றம் காரணமாக திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அவர்கள் அந்தப் பணியை நிறைவு செய்து அவர்களது ஆட்சியில் வந்ததைப் போல ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டார்கள். நான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைத்து விட்டு போய்விட்டார்கள். கொண்டு வந்தது அதிமுக அரசு, ஆனால் திறக்கப்பட்டது. திமுக அரசு. இப்படித்தான் பல திட்டங்களை அதிமுக அரசு மேற்கொண்ட வந்த பணிகளை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக அரசு ஆட்சிக்கு வந்து பாலங்கள் திறக்கப்பட்டது. பல கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனையே தவிர, நான்கு ஆண்டு கால ஆட்சியில் அவர்களால் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.
உதகையில் திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதாரண மருத்துவக் கல்லூரி அல்ல, அனைத்து வசதியும் கூடிய மருத்துவக் கல்லூரி, எனது நேரடி பார்வையில் திறக்கப்பட்டது. ஏனென்றால் மலை மாவட்டத்தில் உள்ள மக்கள் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்திற்கு சொல்ல வேண்டும், இல்லையென்றால் கோவைக்கு செல்ல வேண்டும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி மலை மாவட்டம் மக்களுக்கு இல்லை என்பதால் தரமான அறுவை சிகிச்சை தர வேண்டும் என்பதற்காகவே ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இன்றைக்கு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நவீன முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் கருவிகளின் அதிமுக ஆட்சியில் வாங்கி கொடுத்தோம்.
அதனை இந்த அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. திமுக அரசின் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர் நியமிக்கவில்லை, செவிலியர்களை நியமிக்கவில்லை மருத்துவ உதவியாளர்களை நியமிக்கவில்லை. தற்போது இப்பகுதி மக்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலையை இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது. இந்தியாவிலேயே உயர் கல்வி படிக்கும் மாநிலங்களில் முதல் மாநிலமாக 2019, 2020 ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கை எட்டி விட்டோம். 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி.
அந்த 10 ஆண்டு காலத்தில் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பொழுது கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இடத்தை உயர்த்தி பிடித்த பெருமை அதிமுக அரசுக்கு உண்டு. பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை தமிழகத்திற்கு கொண்டு வந்து இந்தியாவிலேயே சாதனை படைத்த அரசு அதிமுக அரசு என்ற பெருமையை தமிழ்நாட்டிற்கு தேடித் தந்தோம்.
2011 இல் இருந்து 21ம் ஆண்டு வரை 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கி உள்ள மக்கள் அந்தந்த மாவட்டங்களில் சிகிச்சை வழங்கப்பட்டது. தமிழகத்தில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், நான்கு வேளாண்மை கல்லூரிகள், ஐந்து கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1500 ஏக்கர் பரப்பளவில் சேலம் மாவட்டத்தில் கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஆனால் அதனை திறக்க மனமில்லாத அரசாங்கம் திமுக அரசாங்கம்.
ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அதற்கு கல்வி அறிவு தேவை. எங்கு கல்வி சிறந்து விளங்குகிறதோ அங்கு பொருளாதார மேம்படும், சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கும், மாநில மக்கள் அனைத்து வளங்களையும் பெறக்கூடிய வாய்ப்பு கல்விதான். இதனால் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கொண்டு வர பட்டதா, தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என சாடினார்.
நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலினாம். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் தான். இந்தியாவிலேயே பல மாநிலம் இருக்கிறது. அதில் கடன் வாங்குவதிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் ரோல் மாடலாக இருப்பது உண்மைதான். ஊழல், கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன், ரோல் மாடலாக திமுக அரசாங்கம் இருக்கிறது. அதேபோல் டாஸ்மாக் கலெக்ஷனில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடலாக உள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு ரோல் மாடலாக இருப்பது திமுக தான் என்று தெரிவித்துள்ளார்.