"தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளது" - அண்ணாமலை விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2025 – 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கான லோகோவில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளது. அந்த குறியீடு ⟨₹⟩ இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது. ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் என்பவர் திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன்தான்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.