”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க திமுக அரசு துடிக்கிறது” - எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் சொத்துக்களை மிரட்டி கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் 'ராம்சார் ஒப்பந்தத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். இதன்படி 'ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு எண். OA No. 91. நாள் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை CMDA தன்னுடைய அலுவலர்களுக்கு 6.10.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
ஆனால் இதனை திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகார திட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன? இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை இந்த திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கை கட்டி வேடிக்கை பார்க்காது. கழக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.