For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது” - எல்.முருகன் பரபரப்பு புகார்!

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
09:48 PM Feb 14, 2025 IST | Web Editor
“நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது”   எல் முருகன் பரபரப்பு புகார்
Advertisement

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த திமுக அரசு என்ன செய்யப் போகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

“நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேகரித்துள்ளதாகவும், அதன்படி 85க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், ஊட்டி வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான பட்டியலை திமுக அரசு தயார் செய்துள்ளது.

15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளின் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளை மூடவும், அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும், பெற்றோர், ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு திமுக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

பழங்குடிகள், பட்டியலின மக்கள் தோட்ட தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக நீலகிரி இருக்கிறது. அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும், வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே மக்களின் ஒரே நம்பிக்கை. குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். எனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் பள்ளிகளை மூடுவதாக பள்ளி கல்வித்துறை கூறுவதை ஏற்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள், புலம் பெயர்ந்தோர் குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளை எப்படி மூட முடியும்?

தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதாக அரசு அதிகாரிகள் கூறும் வாதத்தை ஏற்க முடியாது. தரமற்ற வகையில் அரசு பள்ளிகளை மாற்றி வரும் திமுக அரசுதான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.  திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பள்ளி கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல் மடைமாற்றம் செய்வதால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ஊழல் முறைகேடுகளில் மூழ்கி முத்தெடுத்து வரும் திமுக அரசு அரசு பள்ளிகளும், ஏழை மாணவர்களும் எக்கேடு கெட்டால் என்ன என்ற மனநிலைக்கு சென்று விட்டது. ஊழல், வெற்று விளம்பரம், செயலற்ற திறன், அரசியல் வன்மத்தில் ஊறி திளைத்து வரும் திமுக அரசு, அரசு பள்ளிகளை இழுத்து மூடும் வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக தொடங்கியுள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என மாறி விட்ட தமிழக அரசு நிர்வாகத்தால் ஏழை, எளிய, பட்டியலின மக்கள் தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை தகர்த்தெறியும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு பள்ளிகளை மூடி விட்டு அங்கு பயிலும் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திமுக அரசா என்பதை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும். வெற்று விளம்பர திட்டங்களை அறிவிப்பதிலேயே காலத்தை கடத்தி வரும் திமுக அரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன செய்யப்போகிறது? என்பது தான் தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைக்கும் கேள்வி.

விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement