"கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு" - பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி, இல்லம் நாடி திட்டத்தின் மூலம் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் ஆகியோருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும், உங்கள் உள்ளம் தேடி இல்லம் நாடி திட்டத்தின் மூலம் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். இரண்டு நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பேன். திருச்செங்கோட்டிற்கு மாலையில் கேப்டன் ரத யாத்திரை வர இருக்கிறது.
இலங்கைவாழ் தமிழர்கள் கேப்டன் அவர்களுக்கு ரதம் வழங்கினர். அதனை உருவாக்கிய பெருமை நாமக்கல் மாவட்ட செயலாளர் அம்மன் வெங்கடாஜலத்தை சேரும் எனக் கூறியவர், அவரை மேடைக்கு வரவழைத்து பூக்கொடுத்து பிரேமலதா விஜயகாந்த மரியாதை செய்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுடன் நாமக்கல் மாவட்டத்திற்கு பலமுறை வருகை புரிந்திருக்கிறேன். மக்களுக்காக மக்கள் பணி என்பதன் வாயிலாக தமிழக முழுவதும் பல்வேறு திட்டங்களை கேப்டன் விஜயகாந்த் செயல்படுத்தினார். அந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தினாலே எல்லா தரப்பு மக்களுக்கும் எல்லா பயன்களும் சென்றடையும்.
தலைவரின் கனவு திட்டம், லட்சியத் திட்டம், கொள்கை திட்டம் என்பது பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீடு, வீடாக ரேஷன் பொருட்களை வெளியாகம் செய்வதாகும். அதனை தற்போதைய அரசு தாயுமானவர் திட்டத்தின் மூலம் செயல்முறைப்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லி, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழத்தில் கொண்டு வந்துள்ளனர். இது கேப்டனுக்கு கிடைத்த வெற்றி. 2011 தேர்தலில் திருச்செங்கோடு, சேர்ந்தமங்கலம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்ற செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.