”தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி திமுக அரசு தோல்வி” - அன்புமணி விமர்சனம்!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
”திமுக அரசை அகற்றவே நான் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். திமுக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்குவரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒரே ஒரு காரணம் கூட இல்லை. கஞ்சா, சாராயம் ஆகியவை மாநிலத்தில் பெருகி விட்டது. சிறுமி முதல் கிழவி வரையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பள்ளி கல்லூரி வாசல்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பதற்கு காரணம் மு.க ஸ்டாலின். மீண்டும் திமுகவிற்கு தயவு செய்து வாக்காளிக்காதீர்கள். கொடுங்கோல் ஹிட்லர் ஆட்சியில் விவசாயிகளை கைது செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள ஓர் ஹிட்லர் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.
திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஏரியில் கட்டப்பட்டுள்ளது முட்டாள்தனமான செயல். இந்த ஏரியில் பேருந்து நிலையம் கட்டக்கூடாது என்று நான் பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால் முடியவில்லை. திண்டிவனம் சிப்காட்டில் உள்ளூர் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டாஸ்மார்க் கடைகளில் நமது மாவட்டம் முன்னிலையில் உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை.
இனிமேல் திமுகவுக்கு வன்னியர்களின் வாக்குகள் அளிக்கக்கூடாது. பட்டியல் இன மக்களுக்கும் வேண்டி தான் நாங்கள் போராடி வருகின்றோம். இதுதான் சமூகநீதி. இதற்காக பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மற்ற மாநில முதல்வர்களால் முடியும்போது தமிழ் நாடு முதல்வருக்கு மட்டும் அதிகாரம் இல்லையா? அதிகாரம் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லும் ஸ்டாலின் சமூக நீதியின் துரோகி.
505 வாக்குறுதிகளில் நீட் தேர்வை ஒரே வாரத்தில் ரத்து செய்வதாக கூறிவிட்டு இது வரையில் செய்யவில்லை. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். 13 சதவிகித வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. பெண்களுக்கு துரோகம் செய்துவிட்டு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி பித்தலாட்டம் செய்த திமுக அரசு அகற்றப்பட வேண்டும். திமுக அயலக செயலர் 3000 கோடி ரூபாய்க்கு போதை பொருள் விற்பனை செய்துள்ளார்”
என்று பேசி முடித்தார்.