”டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மெத்தனப்போக்கோடு செயல்பட்டது” - இபிஎஸ் விமர்சனம்!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மெத்தனப்போக்கோடு செயல்பட்டதால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது..
” திமுக அரசு சுறுசுறுப்பாக இல்லாத காரணத்தினால் டங்ஸ்டன் திட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்து வரலாற்றை பேசியது என்ன தவறு உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்க துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார், மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமுறை கொண்டு வந்துள்ளார்கள்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஆட்சியில் 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனக் கூறினார். திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 113 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் இந்த ஆண்டு இரண்டு நாள் தான் நடைபெற்றுள்ளது மக்களுடைய பிரச்சினைகள் கூட பேச முடியவில்லை. பல்வேறு துறைகளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது, பத்து நிமிடத்தில் பல்வேறு பிரச்சனைகளை எப்படி எடுத்து கூற முடியும்
இந்த அரசு அமைந்த பிறகு சட்டமன்ற கூட்டத்துடன் சரியாக நடைபெறுவதில்லை. தினமும் கொலை கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு நாள் கூட கொலை கொள்ளை சம்பவம் நடைபெறாமல் இல்லை. அதேபோல சென்னையில் தினந்தோறும் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது , எங்கு பார்த்தாலும் கஞ்சாவிற்கு பலர் அடிமையாகிறார்கள். இந்த பழக்கத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
போதை பாதையில் செல்லாதீர்கள் என முதலமைச்சர் தெரிவிக்கிறார். இதன்மூலம் எதிர்க்கட்சியினர் சொல்வதை போல போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதை முதலமைச்சரே ஒத்துக் கொள்கிறார். நீதிமன்றமே போதைப் பொருள் குறித்து தானாக வழக்க பதிவு செய்யும் என கூறும் அளவுக்கு போதை பொருள் பழக்கத்தில் அதிகரித்துள்ளது.
ரெட் அலர்ட் கொடுத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் புயலின்போது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் முழுதும் மழையினால் பாதிக்கப்பட்டு, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர் , இதற்கு காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்கவில்லை. மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உணவுகள் கூட வழங்கவில்லை
அதனால்தான் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தபோது உணவு கிடைக்கவில்லை என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையான கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. அதிகாரிகள் மூலம் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுளதோ அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
திமுக உண்மை செய்திகளை எதுவும் கொடுக்காமல் பொய் செய்திகளை கொடுக்கிறார்கள். டங்ஸ்டன் நிறுவனம் அமைப்பதற்கு கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் , டங்ஸ்டன் நிறுவனம் அமைக்க கூடாது என இந்த அரசு நினைத்துள்ளது. வேறு வழி இல்லாமல் நான் பதவியை விட்டு விடுகிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.