#DMK பவளவிழா பொதுக்கூட்டம் – பிரம்மாண்ட ஏற்பாடுகளால் விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் இன்று (செப். 28) திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும்
பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி
திடலில் இன்று (செப்.28) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு, திமுக
பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட
செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் வரவேற்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால், திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள 75வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டத்தை பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைத்து கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகரமே திமுக கொடி தோரணங்களுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மழை பெய்தால் கூட பொதுக் கூட்டம் தடைபடாதவாறு மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வெள்ளை நிற ஹாலோஜன் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.