நெல்லை மேயர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் தேர்வு!
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக. 5) நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.
நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் இன்று (ஆக. 4) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : "Dear Indian Army.. Big Salute..." - கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!
இதில் நெல்லை மாநகராட்சிக்கு திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்தை மாமன்ற உறுப்பினர்களிடம் காண்பித்து கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தான் மேயர் வேட்பாளர் என தெரிவித்துள்ளனர். இவர் நெல்லை மாமன்றத்தில் 3வது முறையாக திமுக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்டவர்.
நாளை காலை 10:30 மணிக்கு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மறைமுக மேயர் தேர்தல் நடைபெறுகிறது. எனவே போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி ஆணையர் அறிவிக்கவுள்ளார்.