“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!
“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது, அவர்கள் ஏமாளிகள் அல்ல” என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
“ராதிகா சரத்குமார் பிரபலமான வேட்பாளர் என்பதை விட, பிரபலமான குணச்சித்திர நடிகை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த பகுதியில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் தொகுதியின் முக்கிய பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க முடிவெடுத்து விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதி ஒரு வியாபார நகரம். எண்ணெய் வித்துக்கள், பருப்பு போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான அடையாளங்களைக் கொண்டது.
சிறு தானிய உற்பத்தியில் பிரதான இடமாக விருதுநகர் தொகுதி உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த தொகுதியில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு தொகுதியின் வேட்பாளர் நிகழ்ச்சி மேற்கொள்வார். தொகுதியின் பல்வேறு இடங்களில் ஏற்படும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகை விவசாயம் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியிலே மல்லிகை விவசாயிகளை பொறுத்த வரை நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை வைத்துள்ளார்கள்.
“கச்சத்தீவு பிரச்னையில் யாரும் யாரையும் மாறி மாறி குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு வரலாற்று பிழை. வரலாற்றிலே இந்த பிழை இடம்பெற்றிருக்கிறது. அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முடிவுக்கு திமுக உடந்தையாக செயல்பட்டது என்ற முடிவை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. இந்த வரலாற்றுப் பிழையை இனிமேல் திருத்த வேண்டும் என்றால், படிப்படியாக நம்முடைய பிரதமர் ஆளுமையின் அடிப்படையில் அடுத்த நாடுகளோடு இணைந்து செயல்பட்டு இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவார் என்பதில் மாற்று கருத்து கிடையாது. மீனவர்கள் இனி ஒருபோதும் திமுக, காங்கிரசை நம்ப மாட்டார்கள்.
மீனவர்களை இனிமேல் ஏமாற்ற திமுக, காங்கிரஸ் நினைக்க வேண்டாம். அவர்கள் ஏமாளிகள் அல்ல என்றார்.