அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் - பிரேமலதாவிடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்!
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இதனிடையே மறைந்த விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனையை தற்போது உள்ள தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா தலைமையில் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தங்களது விருப்பங்களை, கடிதங்கள் மூலம் எழுதி கொடுத்தனர். அதில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு அதிமுகவுடன் செல்வதே தேமுதிகவுக்கு நல்லது என்று தெரிவித்ததாக தகவல் வெல்ளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் தேவையானதை தேமுதிக கேட்டுப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் விருப்பத்தை, வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைப்பதே நல்லது என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.