தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி!
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர்.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதே போல், அதிமுகவும் 2 கட்டங்களாக 33 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக-விற்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 5 தொகுதிகளுக்கு 19.03.24 மற்றும் 20.03.24 என இரண்டு நாட்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது.
விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று (மார்ச் 21) கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேர்தல் குழுவினர் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. அதனடிப்படையில் எந்த தொகுதியில், எந்த வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தில் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
- மத்திய சென்னை - பார்த்தசாரதி
- விருதுநகர் - விஜயபிரபாகர்
- திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி
- கடலூர் - சிவக்கொழுந்து
- தஞ்சை - சிவநேசன்