"தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்" - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின் சேகரிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"தீபாவளி அன்று வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை 160-180 மெட்ரிக் டன் அளவிலான பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபாயகரமான கழிவுகளை அகற்றும் பணிகளில் 19,062 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாளை முதல் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி அருகே செயல்படும் தனியார் நிறுவனத்திடம், இந்த கழிவுகளை அறிவியல் முறைப்படி அழிப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
கடந்த ஆண்டில் 275 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேர்க்கபட்டு முறையாக அழிக்கப்பட்டது. இந்தாண்டு இதுவரை 180 டன் கழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 250-275 டன் கழிவுகள் இன்று இரவுக்குள் சேர்க்கபட வாய்ப்புள்ளது. மேலும் நாளையும்(நவ.14) இந்த பட்டாசு கழிவு சேகரிப்பு பணிகள் நடைபெற உள்ளது".
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.