நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை... மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க செப்டம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், அதற்கான உரிமம் பெற விண்ணப்பங்களை கொடுக்க மாநகர காவல்துறை காலக்கெடு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளதாவது, "பட்டாசுக்கடை அமைப்பதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, கடை அமைய உள்ள இடத்தின் புகைப்படம், கடை அமைய உள்ள இடத்தைர் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு நகல், கடையின் வரைபடம், மாநகராட்சி ரசீது, சம்மந்தப்பட்ட கட்டிடத்திற்கான அலுவலர் மறுப்பின்மை கடிதம் என அனைத்து ஆவணங்களும் 3 நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.900 செலுத்த வேண்டும். இந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 4-ம் தேதி பகல் 1 மணிக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப்பின் காவல்துறை திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும் எனவும், சாலையோர கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.