#Diwali பண்டிகை | சென்னையில் திடீரென குறுக்கிட்ட மழை... களையிழந்த கடைசி நேர ஷாப்பிங்!
சென்னையில் திடீரென மழை குறிக்கிட்டதால் கடைசி நேர தீபாவளி ஷாப்பிங் களையிழந்து காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகளை பகிர்வது, புதிய உடை உடுத்துவது உள்ளிட்டவை அடங்கும். கடந்த சில நாட்களாக உடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிக அளவில் கூடியதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கடைகட்டியது.
குறிப்பாக சென்னை தியாராக நகர் கடைவீதிகளில் நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூடினர். விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் உடைகள், பட்டாசுகள் வாங்க கடைகளுக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று வியாபாரிகள் காத்திருந்தனர். தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என எண்ணி பலரும் இன்று மதியதுக்கு மேல் ஷாப்பிங் செல்ல திட்டமிருந்தனர்.
ஆனால், சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென்று சுமார் 1 மணி நேரமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட சென்னையில் பெரும்பாலான இடங்களின் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழை நீரும் தேங்கியது.
தற்போது மழை நின்ற நிலையில், சிலர் தீபாவளி ஷாப்பிங் செய்ய கிளம்பியுள்ளனர். இருப்பினும் சென்னையில் உள்ள கடைகளில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை என்றே தெரிகிறது. மழை குறுக்கிட்டு கடைசி நேர ஷாப்பிங்கை மந்தமாக ஆக்கியுள்ளது. மேலும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடைவீதிகள் வெறுச்சோடி காணப்படுகிறது.