For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு ஊழியர்களுக்கு #Diwali போனஸ் - #TNGovt அறிவிப்பு!

08:59 AM Oct 10, 2024 IST | Web Editor
அரசு ஊழியர்களுக்கு  diwali போனஸ்    tngovt அறிவிப்பு
Advertisement

பொதுத்துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000 என்பதைத் தளர்த்தி அனைத்து C மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும். இதுதவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400-ம் அதிகபட்சம் ரூ.16800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு, 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement