விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் பராமரிப்பு தொகை பெறலாம் - உச்சநீதிமன்றம்!
விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் தனது முன்னாள் கணவனிடமிருந்து பராமரிப்பு தொகையினை பெற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் அவரது முன்னாள் மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க வேண்டும் என கடந்த 2023 ஆம் ஆண்டு தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் ஜீவனாம்சம் உள்ளிட்ட தொகையினை பெற முடியும். அதே நேரத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் பராமரிப்புத் தொகையினை கோர முடியாது என வாதங்களை முன் வைத்திருந்தார். ஏனென்றால் இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அதிக பலன்களை இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கக் கூடியது என தெரிவித்திருந்தார்.
இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம், இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி, விவாகரத்தான இஸ்லாமிய பெண் தனது முன்னாள் கணவனிடமிருந்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் பெறுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என தீர்ப்பளித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விவாகரத்து செய்த மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.