விவாகரத்து பெற்ற மகள் - வாத்தியங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை!
உத்தரப் பிரதேசத்தில் விவாகரத்து பெற்ற தனது மகளை மேள வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையின் செயல் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அனில்குமார். புதுடெல்லி உள்நாட்டு விமான நிலையத்தில் பொறியியலாளராக பணியாற்றும் இவரது மகள் ஊர்வி ( 36) என்பவர், கணினி பொறியாளர் ஒருவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஊர்வியின் மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஊர்வி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நடைபெற்று வந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. இந்த நிலையில் விவாகரத்து குறித்த ஆவணங்களை பெற்று வீடு திரும்பிய தனது மகளை பேண்ட் வாத்தியங்களுடன் கோலகலமாக ஊரே பார்க்கும்படி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அனில்குமார்.
இதுகுறித்து அனில்குமார் கூறுகையில்,
சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அவளை இப்படிதான் அனுப்பி வைத்தோம். தற்போது அவள் தனது புது வாழ்க்கையை தொடங்க இருக்கிறாள்” என தெரிவித்துள்ளார். சமூகத்தின் ஆணாதிக்க நடைமுறைகளை உடைத்து இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அனில்குமாரின் செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த வருடமும் இதேபோன்று ஜார்க்கண்டை சேர்ந்த பிரேம் குப்தா என்பவர் விவாகரத்து பெற்ற தனது மகளை ஊர்வலமாக அழைத்து வந்தது குறிப்பிடதக்கது.