“திமுக - விசிக தொகுதி பங்கீடு நாளை முடிவடையும்!” - ரவிக்குமார் எம்.பி
திமுகவுடன் தொகுதி பங்கீடு நாளை முடிவடையும் என விடுதலை சிறுத்தைகள்
கட்சியில் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்
உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம்
நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்வது
குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எம்.பி. ரவிக்குமார் kஊறியதாவது:
திருமாவளவன் மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம் அதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறோம். தேர்தலின் போது நாடாளுமன்றத்தில் திருமாவளவனின் நாடாளுமன்ற பணிகள் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி ஒரு லட்சம் வாக்கிற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேர்தலை சந்திக்க உள்ளோம். கடந்த ஐந்து வருடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் எடுத்த முயற்சியின் காரணமாகவும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மத்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார்.
இதனால் நாடு முழுவதும் உள்ள 12,000 பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் பயின்று வருகின்றனர். இதற்கு முழு முயற்சி எடுத்தவர் திருமாவளவன். மீன் பிடிக்க லைசன்ஸ் வாங்கிக் கொண்டு மீன் பிடிக்க வேண்டும் என்ற கொடுமையான சட்டத்தை தடுத்து நிறுத்தி எப்போதும் உள்ள நடைமுறையில் மீன் பிடிக்க வழிவகை செய்தவர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது. இத்திட்டத்தை தொடர வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இது குறித்து நிதி அமைச்சரை சந்தித்தும் மனு கொடுத்ததன் காரணமாக உயர் கல்வி பெறுவதற்கான ஸ்காலர்ஷிப் திட்டம் 2025 வரை நீட்டிக்க செய்தது அவரது சாதனைகளில் ஒன்று.
சிதம்பரம் தொகுதியில் மருத்துவ கல்லூரி வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதன் காரணமாக அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது சிதம்பரம் ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை தொகுதிக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பி உள்ளார். தொகுதி பிரச்சனைகள், மாநில
பிரச்சனைகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரச்சனைகளில் போராடி வெற்றி
பெற்றுள்ளார். இதனைக் கூறி எங்களது தேர்தல் பிரச்சாரம் அமையும்.
திமுக உடனான தொகுதி விடுதலை சிறுத்தைகளின் தொகுதி பங்கீடு நாளை முடிவடையும் என நினைக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரவிக்குமார் மோடி தேர்தலை சந்திப்பதற்காக எது வேண்டும் என்றாலும் பேசுவார் அவரது கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை பல்வேறு விதங்களில் தூற்றினார். அதனால் தான் கூட்டணியும் உடைந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார் என்றால் அண்ணாமலை
கருத்து ஏற்கத்தக்கது அல்ல என சொல்கிறாரா என்பது தெரிய தெரியவில்லை. வாக்கு
வேண்டும் என்பதற்காக பல்வேறு கருத்துகளை மோடி சொல்கிறார். அவரது கருத்து
வாக்கிற்காக சொல்லும் கருத்து அதில் உண்மை இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னால் குடியரசு தலைவரிடம் இத்திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கூறியுள்ளோம். இது தேர்தலை ஒழித்துக்கட்டும் திட்டமாகும் அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்கும் திட்டமாகும். இது தேர்தல் நடத்தும் திட்டம் என்று ஏமாந்து
விடக்கூடாது. இத்திட்டம் அதிபர் ஆட்சிக்கு கொண்டு போகும் திட்டமாகும்.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் அதன் பிறகு தேர்தலே நடைபெறாது என்பதை ஒவ்வொரு
வாக்காளரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் கூறியுள்ளார்.