அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு,
அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களைச் சார்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா,
"நீதிமன்ற உத்தரவுப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தவுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக நடைபெறும். கடந்த காலங்களைப் போலவே வரும் ஆண்டிலும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 1,000 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.