பேரிடர் நிதி - தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!
கடந்த 2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மாநிலங்களுக்கு கூடுதல் உதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களைச் சந்தித்த பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் தோளோடுதோள் நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில், மத்திய அரசு SDRF இன் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், NDRF இன் கீழ் ரூ.5,160.76 கோடியையும் 19 மாநிலங்களுக்கு விடுவித்தது. கூடுதலாக, 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (SDMF) ரூ.4984.25 கோடியும், எட்டு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (NDMF) ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.