பார்வை மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஏழு ஆண்டு ஆசை.. நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்!
தேசிய விருது வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் 7 வருட ஆசையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சீவலப்பேரி பாண்டி மற்றும் எட்டுப்பட்டி ராசா ஆகிய படங்கள் அவருக்கு மணிமகுடமாக அமைந்தது. சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ள நெப்போலியன், நிஜவாழ்க்கையில் பல உதவிகளை செய்து வருகிறார்.
நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சினிமாவில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்கி, தனது மகனின் உடலநலக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நெப்போலியன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது நண்பரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றார். அங்கு விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், தற்போது சென்னை வந்துள்ள நடிகர் நெப்போலியன், தேசிய விருது வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் 7 ஆண்டு ஆசையை நிறைவேற்றியுள்ளார். அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கிய அவரின் கனவு நடிகர் நெப்போலியன் மூலம் நனவாகி உள்ளதாக பாடகி ஜோதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெப்போலியனிடம் வீடியோ காலில் பேசிய பார்வை மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, "என்னை உங்கள் குடும்பத்தினர் அமெரிக்காவில் நன்றாக பார்த்துக் கொண்டனர். உங்கள் அன்புக்கு நன்றி. தனுஷ் அண்ணா எப்படி இருக்கார்" என்றார். அப்போது பேசிய நெப்போலியன், "நன்றாக இருக்கிறார். நான் சென்னையில் இருக்கிறேன். நீ நல்லா பெர்ம்பாம் பண்ணுணயா" என்று கேட்டார்.
அதற்கு ஜோதி, "நல்லா பெர்ம்பாம் பண்ணுனேன். என்னை கிருத்திகா ஆண்டி சாப்பாடு போட்டு நல்லா பார்த்துக் கொண்டார்கள். நார்த் கரோலினாவில் வெள்ளிக்கிழமை காலையில் பிளைட். செப்டம்பர் வரை அமெரிக்காவில் தான் இருப்பேன். செப்டம்பர் 11ம் தேதி கிளம்புகிறேன்" என்றார். அதற்கு நெப்போலியன் "இந்த மாத கடைசியில் அமெரிக்கா வந்துவிடுவேன். ஆகஸ்ட் மாதம் நாம் சந்திப்போம்" என்றார்.
அதற்கு அந்த பெண், "உலகம் முழுவதும் பாட வேண்டும் என்பது என் கனவு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மத்திய அரசு வழங்கும் National Award of persons with disabilities என்ற விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே பாடகியான ஜோதி இசைப்பிரிவில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.