மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி!
பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவர், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
2007ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், அவர் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பந்தயத்தில் அவர் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி முகமை தேர்வு செய்தது. இதைத் தொடா்ந்து, அவர் விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஏற்ப என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அந்த முகமை ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில், ஜான் மெக்ஃபால் விண்வெளிக்குச் செல்வதற்கு தடையாக எந்தவொரு தொழில்நுட்ப அல்லது மருத்துவக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல அனுமதித்து மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கிப் பணியாற்ற உள்ளார். ஆனால், அவர் எப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வார் என்ற தேதி இறுதி செய்யப்படவில்லை.