For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்... சினிமாவின் ஒரு அந்தாதி!

11:59 AM Dec 23, 2023 IST | Web Editor
இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்    சினிமாவின் ஒரு அந்தாதி
Advertisement

தனது வாழ்நாளை சினிமாவிற்காக அற்பணித்து, அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்த திரையுலக பிரம்மா, கலையுலக பாரதி இயக்குநர் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் 1930-ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தை கிராம அதிகாரி. தான் பிறந்த ஊரிலேயே தனது பள்ளிப் படிப்பை பயின்ற இவர், சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டவர். தனது 12 வயது முதலே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார்.  இதனால் சினிமா மீது அவருக்கு ஆசை விழுதுவிட்டது.

ஆனால் படிப்பில் இருந்து என்றுமே பின்வாங்காத பாலசந்தர்,  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. விலங்கியல் முடித்தார்.  கதை எழுதுவது,  நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக்கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம் பெறும்.  தொடர்ந்து சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

  ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து நாடகம் இயக்கும் திறமையையும் இவர் வளர்த்துக் கொண்டார். தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  அவரது நீர்க்குமிழி, நாணல், விநோத ஒப்பந்தம் உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதனைத்தொடர்ந்து, எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, 1964-ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் கே.பாலசந்தர்.  அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. 1981-ம் ஆண்டு ‘கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  குறைந்த செலவில் நிறைவானப் படங்களைக் கொடுத்தவர் என பெயர் பெற்றவர் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்பிபி, சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமானோரை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் கொண்டவர் கே.பாலசந்தர்.

பொய், ரெட்டைச் சுழி, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள்  போன்றவையே கருப்பொருளாக விளங்கின.

கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். தண்ணீர் தண்ணீர், அபூர்வ ராகங்கள், எதிர் நீச்சல், வறுமையின் சிறம் சிவப்பு, அக்னி சாட்சி, வானமே எல்லை, உன்னால் முடியும் தம்பி, சிந்துபைரவி உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரைப் புகழேணியின் உச்சியில் ஏற்றின. இவரை 'இயக்குநர் சிகரம்' என திரைக்குழுவினரும், ரசிகர்களும் அன்போடு அழைத்தனர்.

திரைத்துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றினர். ரயில் சிநேகம், கை அளவு மனசு உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். சின்னத்திரையில் நெடுந்தொடர் முறையை அறிமுகம் செய்தவர் இவர் தான். இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும்.

1995-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது, எட்டு முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றவர். அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட உலக பிரம்மா, கலையுலக பாரதி என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு 84ஆவது வயதில் இதே நாளில் காலமானார்.

Tags :
Advertisement