For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

" #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

03:50 PM Sep 01, 2024 IST | Web Editor
   vaazhai  படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்     ஜவாஹிருல்லா எம் எல் ஏ பேட்டி
Advertisement

வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்

Advertisement

நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த மனித நேய
மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்பது விவசாயத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிறுவனம். இதில் இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசுத் துறைகளில் எல்லா தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

சிறந்த இயக்குநரான மாரி செல்வராஜ் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தார் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி சேற்றில் கவிழ்ந்த போது, முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி விடிய விடிய போராடி பலரை காப்பாற்றினர்.

இதன்மூலம் அதனை காட்சிப்படுத்தி தென் மாவட்டங்களில் தேவையான சமூக நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவறவிடுவிட்டார். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தீய நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி மட்டுமின்றி பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் காரணமாகவே இப்போது நாடாளுமன்ற கூட்டு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை நாங்கள் தெரிவிப்போம்.

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் அது பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி அதை விட்டு விட வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். திருநெல்வேலி- நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் ரயில்கள் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள் : கேரளாவில் கணவனுக்கு பின் #chiefsecretary ஆக பதவியேற்ற மனைவி! பினராயி விஜயன் பெருமிதம்!

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். பாலியல் வன்முறை கவலைக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டுமின்றி ஆசிரியர், பெற்றோர், ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் மோசமான காட்சிகளை பதிவேற்றம் செய்கின்றனர். பாலியல் குற்ற
வழக்குகளை ஒரு மாதத்திற்குள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான
தண்டனைகளை வழங்க வேண்டும். இதேபோல் பாலியல் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.

நம்முடைய நாட்டில் நேரு, காந்தி காலம் தொட்டே மதச்சார்பின்மை என்பது அனைத்து மத
சமயங்களையும் சமமாக கருதுவது தான். முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது போல
கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களையும் அரசு வலிமையாக எடுக்க வேண்டும். அதுதான்
மதச்சார்பற்ற அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பாட நூல்களில் குறிப்பிட்ட
மதம் சார்ந்த விஷயங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
பேசியிருக்கிறார். பாட நூல்களில் அனைத்து மதம் சார்ந்த விஷயங்களையும் சேர்க்க
வேண்டும். மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாசாரம் பரவி இருப்பது
கவலைக்குரியது.

இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித நேய மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில் வரும் 22 ஆம் தேதி முக்கிய நகரங்களில் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார அணிவகுப்பு நடைபெற உள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதான வழக்கை விரைவாக நடத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். அரசியல் கட்சி என்ற
அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்
என்பதற்காக அழுத்தம் கொடுப்போம்"

இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Tags :
Advertisement