"டிஜிட்டல் பொருளாதாரம்" - பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!
டிஜிட்டல் பொருளாதாரம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்ற பிரதமரின் கூற்றுக்கு விளக்கம் கேட்டு ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இடையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் இந்த கூற்றுக்கு விளக்கம் கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் 5 கேள்விகளை முன்வைத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம் :
"நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி 2014ம் முதல் 2019ம் ஆண்டு இடையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என கூறியுள்ளார்.
- பிரதமர் தனது கூற்றினை நிரூபிக்கும் வகையிலான தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவாரா?
- ஏன் 2019ம் ஆண்டுடன் நிறுத்தி விட்டீர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை என்ன நடந்தது?
- ஒரு துறையில் மட்டுமே 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்றால் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன?
- ஏன் படித்த இளைஞர்களின் வேலையின்மை 42 சதவிகிதமாக இருக்கிறது? நீங்கள் குறிப்பிடும் டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?
- 2024 ஆம் ஆண்டு ஐஐடியில் இருந்து வெளியான பட்டதாரிகளின் 38 சதவிகிதம் பேர் இன்னமும் வேலை ஏன் கிடைக்காமல் இருக்கிறார்கள்? டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஐஐடி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா?"
இவ்வாறு பிரதமரின் கூற்றுக்கு தனது கேள்விகளை ப.சிதம்பரம் முன் வைத்துள்ளார்.
https://x.com/PChidambaram_IN/status/1793512779367985370