முஸ்லிம் பெண்களுக்கு அதிக உதவித் தொகை வழங்குவதாக உத்தவ் தாக்கரே சொன்னாரா? - #TheQuint உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன?
This news Fact Checked by The Quint
மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மராத்தி செய்தி சேனலான புத்தாரி நியூஸின் பெயரிலான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானால் முஸ்லிம் பெண்களுக்கு அதிக உதவித் தொகை கொடுப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாக பகிரப்பட்ட வைரல் படத்தில் குறிப்பிட்டிருந்தது.
"உத்தவ் தாக்கரே முதலமைச்சராக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் தனது அன்பு சகோதரிகளுக்கு ரூ. 3,000 உதவித் தொகை கொடுப்பார். அதேநேரத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதன் காரணமாக முஸ்லீம் சகோதரிகளுக்கு ஊட்டச்சத்து டயட் யோஜனாவின் கீழ் உத்தவ் தாக்கரே மாதந்தோறும் ரூ. 6,000/- வழங்குவார்" என அப்பதிவில் எழுதப்பட்டிருந்தது.
உண்மை என்ன ?
மீண்டும் முதலமைச்சரானால் முஸ்லிம் பெண்களுக்கு உத்தவ் தாக்கரே அதிக உதவித் தொகை வழங்குவார் என சஞ்சவ் ராவத் சொன்னதாக வெளியான தகவலை தி குயிண்ட் - வெப் கூஃப் நிறுவனம் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. இது தொடர்பாக கூகுளில் முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது உத்தவ் தாக்கரே அப்படிச் சொன்னதாக குறிப்பிடும் எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை.
இந்த தகவல் குறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்திடம் திகுயிண்ட் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியபோது அவர் இக்கூற்றை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் இது திட்டமிட்டே திரித்து பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மராத்தி செய்தி சேனலான புத்தாரி நியூஸின் பெயரில் வெளியான இப்படம் குறித்து சம்பந்தபட்ட நிறுவனத்திடம் தி குயிண்ட் கேட்டபோது பத்தாரி செய்தியின் மூத்த நிர்வாக ஆசிரியர் துளசிதாஸ் வைரலான படம் போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முடிவு :
உத்தவ் தாக்கரே மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானால் முஸ்லிம் பெண்களுக்கு அதிக உதவித் தொகை கொடுப்பார் என பரவும் செய்தி போலியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.