For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வடகரா தொகுதியில் இந்துக்கள் ஓட்டுக்கள் குறைந்ததால்தான் தோற்றேன் என கே.கே.ஷைலஜா தெரிவித்தாரா? உண்மை என்ன?

01:43 PM Jun 13, 2024 IST | Web Editor
வடகரா தொகுதியில் இந்துக்கள் ஓட்டுக்கள் குறைந்ததால்தான் தோற்றேன் என கே கே ஷைலஜா தெரிவித்தாரா  உண்மை என்ன
Advertisement

This news Fact checked by Newsmeter

Advertisement

கேரள இடது ஜனநாயக முன்னணி வடகரா தொகுதி வேட்பாளரும் மூத்த இடதுசாரி தலைவருமான கே.கே.சைலஜா மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபி பரம்பிலிடம் தோல்வியைத் தழுவினார்.  இந்த தோல்விக்கு காரணம் தளச்சேரியில் உள்ள ஒரு முக்கிய முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவால் இந்துக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என கே.கே.ஷைலஜா கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.  இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் மலையாளம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதுகுறித்து விரிவாக காணலாம்

மக்களவைத் தேர்தல் - இடது ஜனநாயக முன்னணி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் ஜூன் 9 அன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில்  பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள்,  5 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.  இந்த பதவியேற்பு விழா மாலை 7:15மணிக்கு தொடங்கி இரவு 10மணி வரை நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் எதிர்கட்சித்தலைவர்கள்,  தொழிலதிபர்கள் , திரை பிரபலங்கள் மற்றும் பல வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் ஒரே கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டாலும் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தே களம் கண்டன.  கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ்,  இடது ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவியது.  இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவில் காங்கிரஸ் 18 இடங்களையும்,  இடது ஜனநாயக முன்னணி 1 இடம் மற்றும் பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியது.

கே.கே.சைலஜா இப்படிச் சொன்னாரா? - வைரலாகும் செய்தி

மக்களவைத் தேர்தல் கேரள மாநிலம் வடகரா தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா,  காங்கிரஸ் கட்சியின் ஷஃபி பரம்பில் மற்றும் பாஜக சார்பில் பிரஃபுல் கிருஷ்ணா ஆகியோர் போட்டியிட்டனர்.  இதில் ஷஃபி பரம்பில் 1,14,506 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் தோல்வி குறித்து பதிலளித்த இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் கே.கே.ஷைலஜா, தோல்விக்கு இந்துக்கள் வாக்குகள் குறைந்ததே காரணம் என்றும், தளச்சேரியில் உள்ள முக்கிய முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவால் இந்துக்கள் வாக்குகள் தனக்கு கிடைக்காமல் போனதாகவும் கே.கே.ஷைலஜாவின் படத்துடன் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

உண்மைச் சரிபார்ப்பு:

கே.கே.ஷைலஜாவின் பெயரில் பரவும் நியூஸ் கார்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், கே.கே.ஷைலஜா அப்படி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் நியூஸ்மீட்டர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலாவதாக வைரலாக பரவும் நியூஸ் கார்டில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை . எனவே அவை திருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.  அதே போல நியூஸ் கார்டில் இடம்பெற்றுள்ள  எழுத்துரு (font ) ஏசியாநெட் நியூஸ் வழக்கமாக பயன்படுத்தும் Font அல்ல என்பதையும் காணமுடியும்.

மேலும் இப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான ஜூன் 3, 2024 அன்று ஏசியாநெட் நியூஸின் சமூக ஊடக தளங்களில் இதேபோன்ற வேறு உள்ளடகத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டது தெரியவந்தது.  இந்த நியூஸ் கார்டு தொடர்பான விரிவான செய்தி அறிக்கையும் ஏசியாநெட் நியூஸ் இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.  கார்டில் உள்ள முக்கிய வார்த்தைகளை அழித்து,  அவற்றில் எழுத்துக்களை மாற்றி அதன் மூலம் தவறாக சித்தரித்து இந்த நியூஸ் கார்டை பரப்பியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து கே.கே.ஷைலஜா ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என அவரது சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தோம்.  6 ஜூன் 2024 அன்று பேஸ்புக்கில் பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் வடகரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கே.கே.ஷைலஜா தெரிவித்த பதிலை பல பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன.  ஏசியாநெட் நியூஸ் பெயரில் பரவும் கருத்துக்களை கே.கே.ஷைலஜா தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

முடிவு

வடகரையில் எல்.டி.எப்-க்கு இந்து வாக்குகள் குறைந்துள்ளதாகவும்,  இதற்கு தலச்சேரியில் உள்ள முக்கிய முஸ்லிம் குடும்பத்தின் ஆதரவே காரணம் என்றும் கே.கே.சைலஜா கூறியதாக பரவும் செய்தி போலியானது என்பது ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement