நாதக-வில் இருந்து விலகினாரா காளியம்மாள்?
சமீப காலமாக, நாம் தமிழர் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்னர் சீமான் பெரியாரை விமர்சித்ததை எதிர்த்து பலரும் வெளியேறுவதாக அறிவித்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வரகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக காளியம்மாளிடம் கேட்டபோது, தனது நிலைப்பாடு குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.