பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு முன் சந்திரபாபு நாயுடு கோபத்தில் ஆவேசமாக பேசினாரா? - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
This news Fact checked by Newsmeter
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மிக கோபமாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாக பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் இன்று காலை 11:27மணிக்கு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், விஐபிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாஜக கூட்டணிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு கோபமாக பேசினாரா?
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு, தெலுங்கில் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கு முன்பாக நாயுடு தனது நிதானத்தை இழந்துவிட்டார் என்ற கேப்சனுடன் சிலர் இந்த வீடியோ பரப்பி வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
வீடியோவின் கீஃப்ரேமின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, அதன் முடிவில் நவம்பர் 19, 2021 அன்று V6 நியூஸ் தெலுங்கு சேனலில் இந்த வீடியோ வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி இந்த வீடியோ கடந்த ஆட்சியின்போது ஆந்திர சட்டசபையில் சந்திரபாபு நாயுடு தெலுங்கில் ஆவேசமாக பேசி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் வீடியோ என்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல இதன் கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியபோது அது நவம்பர் 19, 2021 அன்று NDTV செய்திக்கு அழைத்துச் சென்றது. அதன் தலைப்பு ‘ சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்” என வைக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி புவனேஸ்வரி மீது கடுமையான மற்றும் இழிவான வார்த்தைத் தாக்குதல்கள் ஆந்திர சட்டசபையில் முன்வைக்கப்பட்டதால் முன்பு ஆட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்திர பாபு நாயுடு வெளிநடப்பு செய்தார்.
முடிவு :
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மிக கோபமாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாக பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தவறாக வழிநடத்துகிறது என்பதும் திரித்து பரப்பப்பட்டுள்ளது என்பதும் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.