Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "ஒரு பூத்தில் ஒரே ஒரு ஓட்டு" மட்டுமே வாங்கினாரா?

10:00 AM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by Newschecker

Advertisement

கோயம்புத்தூரில் உள்ள பூத் ஒன்றில் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது.  இந்த செய்தியின் உண்மை குறித்து நியூஸ் செக்கர் ஆய்வுக்கு உட்படுத்தியது.  இது குறித்து விரிவாக காணலாம்.

அண்ணாமலை "ஒரு பூத்தில் ஒரே ஒரு ஓட்டு" மட்டுமே வாங்கினாரா..?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ்,  திமுக,  சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்த நிலையில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட  அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி கடிதம் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  அக்கடிதத்தில் ‘BCUAF 07464’ என்கிற இயந்திரத்தில் அண்ணாமலைக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டும் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தை காண முடிந்தது.  சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தது.

உண்மை சரிபார்ப்பு:

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து,  அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அத்தகவல் குறித்து நியூஸ் செக்கர் தேடியது.  இத்தேடலில் தமிழக பாஜக இளைஞர் அணியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் பிரவீன்ராஜ் என்பவர் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறி உண்மையான கடிதத்தின் படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.

அப்படத்தில் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாக  குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.  தொடர்ந்து தேடுகையில் கோவை மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை என்று சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் அதே கடிதத்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அக்கடிதத்திலும் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாகவே  குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக பரப்பப்படும் கடிதத்தின் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பது நமக்கு தெளிவாகின்றது.  வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கடிதத்தின் படத்தையும் எடிட் செய்து மாற்றப்பட்ட கடிதத்தின் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

முடிவு

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த  ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.  உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார். எனவே அண்ணாமலை குறித்து பரவும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AnnamalaiBJPCoimbatoreElection2024Fact CheckFalseSingle VoteTN BJP
Advertisement
Next Article