தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பாஜக வேட்பாளர் மாதவி லதா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாரா? உண்மை என்ன?
This news fact checked by Boom
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவி லதா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதாக வைரலாகிவரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் மாதவி லதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என்று அவர் கூறுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இதன்மூலம் தான் முன்பு அவமதித்த சமூகத்தைப் பற்றிய தனது கருத்தை மாதவி லதா மாற்றிக்கொண்டார் என்ற கூற்றுடன் இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு:
மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து போட்டியிட்ட மாதவி லதா 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பெண் முஸ்லிம் வாக்காளர்கள் பர்தாவைத் தூக்கி தங்கள் அடையாளத்தை நிரூபிக்கக் கோரிய சம்பவம் உட்பட, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் அறிக்கைகள் என மாதவி லதா பல்வேறு விமர்சனங்கள் செய்துள்ளார்.
இந்த வீடியோ ஏப்ரல் 2024-ல் மாதவி லதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் முக்கிய வார்த்தைகள் தேடல் செய்யப்பட்டது. அப்போது, மே 20 முதல் வைரலாகும் இந்த வீடியோ ட்விட்டர் (எக்ஸ்) மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பல பதிவுகள் கண்டறியப்பட்டன.
இந்த நேர்காணலின் முழுப் பதிப்பும் ஏப்ரல் 22, 2024 அன்று அதே சேனலால் பகிரப்பட்டது. அப்போது மாதவி லதா CAA மற்றும் முத்தலாக் போன்ற பிற விஷயங்களைப் பற்றி விவாதித்தார். வைரலாகிவரும் வீடியோ முழு வீடியோவில் 1:21 நிமிடங்களில் தொடங்குகிறது.
முடிவு:
எனவே, ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாதவி லதா, முஸ்லிம்கள் குறித்து பேசியதாக வைரலாகிவரும் வீடியோ தேர்தலுக்கு முந்தையது என கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.