மாம்பழத்தை சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சனம் செய்தாரா? - வைரலாகும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் பதிவு!
மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. அவர் பாஜகவை விமர்சனம் செய்வதாக கருத்துகள் பரவி வருகின்றன.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் தவிர அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பக்கங்களும் சில நாட்களாகவே பெரும் கவனிப்பை பெற்று வருகின்றன.
இதற்கிடையே இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்திய தேர்தல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த பதிவில்,
“இப்போது 400 என்று பேசுகிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175 முதல் 200 என்றே இருக்கும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றிப் பேசுகிறேன். ஒவ்வொரு பதிவும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அவர் தனது பதிவில் எந்தவொரு இடத்திலும் அரசியல் கட்சியைக் குறிப்பிடவில்லை. ஆனால், பலரும் அவர் பாஜக பற்றி குறிப்பிடுவதாக அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ளனர். ஏனென்றால் பாஜக தான் இந்தத் தேர்தலில் 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது. அதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே குரைஷி இப்படிப் பதிவிட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக பாஜகவின் 'அப் கி பார் 400 பர்' முழக்கத்தைக் குறிவைத்து குரைஷி விமர்சித்துள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பாஜகவையும் மோடியையும் உங்களுக்குப் பிடிக்காது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நேரு குடும்பத்தினர் செய்தி தொடர்பாளர் போலத் தான் பேசி வருகிறீர்கள்" என்று சாடியுள்ளார்.
அதே நேரம் சிலர் உண்மையாகவே இவர் சொன்னது போலத் தான் நடக்கும் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் மிகச் சரியாகச் சொல்லியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.