முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தருமபுரம் ஆதீனம்! மடத்தின் பெருமையை காத்ததாக அறிக்கை!
தருமபுரம் ஆதீன மடம் தொடர்பான போலி ஆடியோ, வீடியோ விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதினம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தருமபுரம் ஆதீன நிர்வாகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.
எனவே மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வருக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.