“பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, 72வது பிறந்தநாள் கொண்டாடும் நான், 75வது பவள விழா கொண்டாடுன திமுக-வின் தலைவராக பணியாற்றி வருவதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த இடத்திற்கு அழைத்து வந்தது தொண்டர்களாகிய நீங்கதான். கோபாலபுரம் நான் பிறந்த இடமாக இருந்தாலும் தமிழ்நாடு என்னை வளர்த்து. தமிழ்நாடு முழுவதும் கருப்பு சிவப்பு கொடி ஏற்றியதால்தான் கோட்டையில் கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற பிறந்தநாள் விழாக்கள் சாலையில் வரும் ஸ்பீடு பிரேக்போல் ஒரு நிமிட ஓய்வுதான்.
இந்த நிகழ்ச்சியில் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் தோழமைக் கட்சிகளுடன் தமிழ்நாட்டுக்கான உரிமைக்குரலை எழுப்ப வாய்ப்பு அமைந்ததுதான். இது பிறந்தநாள் விழா மேடைபோல் இல்லாமல் வெற்றிவிழா மேடைபோல் உள்ளது. இது வெற்றி விழா மேடைதான். 2019ல் இருந்து கொள்கை கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம் 2026ல் அடையப்போகும் வெற்றிக்கு தொடக்க விழா மேடை இது.
என்னுடைய வெற்றிக்கு அடிப்படை தோழமை உணர்வுதான் என எல்லா இடத்திலும் மறக்காமல் பதிவு செய்தவன் நான். சட்டமன்றத்திலும் பதிவு செய்துள்ளேன். கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால் விரிசல் வராது. எங்கள் ஒற்றுமையைப் பார்த்து சிலர் எரிச்சலோடு விரிசல் ஏற்படுமா? என சிலர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். அப்படி நினைப்பவர்களின் ஆசையில்தான் மண் விழும். கூட்டணியில் விரிசல் விழாது. முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்த தோழமைக் கட்சித் தலைவர்களை என் இதய நாற்காலியில் உட்கார வைத்துள்ளேன். நம் ஒற்றுமை தமிழ்நாட்டையும், தமிழையும் சமூகநீதியையும், சமத்துவத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியுள்ளது.
2021ல் தப்பித்தவறி அதிமுக பாஜக ஆட்சியில் வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரை மட்டத்திற்கு போயிருக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் அதிமுக-வால் அடகு வைக்கப்பட்டிருக்கும். இவர்களிடம் இருந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டை காப்பாற்றியுள்ளது. இந்தியாவுக்கு வழி காட்டுவதே நம் கூட்டணிதான். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம். இதை மத்திய அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நம் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல், பார்த்துப் பார்த்து வஞ்சிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. நீட் தேர்வை திணித்தார்கள், புயல் வெள்ளம் வந்தால் நிதி கொடுக்காமல் இருந்தார்கள். தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் இருப்பதை பார்த்து அதை சீர்குலைக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கையை திணித்து, பின்னுக்கு தள்ள நினைத்தார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நிதி தர மாட்டோம் என்கிறார்கள்.
நான் வேதனையோடு சொல்கிறேன் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் அளவிற்கு கொடூரமானவர்களின் கைகளில் இந்தியா சிக்கியுள்ளது. மத்திய அமைச்சர் தேசிய கல்விக் கொல்கையை ஏற்றுக்கொண்டல்தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மிரட்டுகிறார். எந்த சட்டத்தில் இப்படி இருக்கிறது. மும்மொழிக்கொள்கை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறதா? உங்களால் ஒரு நீட் தேர்வை குற்றச்சாட்டுகளுக்கு இடம் அளிக்காத வகையில் நடத்த தெரியவில்லை. நீங்கள் தமிழ்நாட்டிற்கு அட்வைஸ் செய்கிறீர்களா? பேருதான் தர்மேந்திர பிரதான் ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை.
நம் குழந்தைகளின் கல்வி கவனை சிதைக்கும் வேலையை தர்மேந்திர பிரதான் செய்ய அதை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் பிரதமருக்கு அழகா? இந்தியை திணிக்காதீர்கள். எங்களுக்கு தாய்மொழி தமிழும் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும் தேவைப்பட்டால் அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பிற மொழிகளை கற்றுக்கொள்கிறோம். தமிழ்நாடு வளர காரணம் இரு மொழிக்கொள்ளை. இந்தி திணிப்பு குறித்து நான் போட்ட பதிவுக்கு வட மாநிலங்களில் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதில் இந்தி மொழியால் தங்கள் தாய் மொழி எவ்வாறு பாதிப்படைந்தது என ஏராளமானோர் எழுதியிருந்தனர். இப்படி எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பதுதான் தமிழ்நாடு. எங்களை என்ன மிரட்டினாலும் உங்களால் இந்தி மொழியை திணிக்க முடியாது. மிரட்டினால் அஞ்சுவதற்கு அதிமுக என நினைத்தீர்களா? இது திமுக. மிரட்டினால் அடக்க நினைப்பவர்களை அடங்கி போக வைப்பவர்கள் நாங்கள். தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் எப்பேற்பட்ட அடக்குமுறையையும் எதிர்க்க துணிந்தவர்கள் நாங்கள். தமிழர்களாகிய நாங்கள் சுய மரியாதையுடன் இருக்கும் திராவிடர்கள்.
நாடாளுமன்றத்தில் முழங்கும் நம்மை தடுக்க தொகுதி மறுசீரமைப்பு கொண்டுவரப் போகிறார்கள். நம் தொகுதி எண்ணிக்கையும் பிரதிநிதித்துவத்தையும் குறைக்க நினைக்கிறார்கள். அதனால்தான் முன்கூட்டியே இந்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறோம். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பின்போது மோடி எம்.பி-க்கள் எண்ணிக்கை அதிகமாகும் என பேசினார். மகளீர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தலுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்றார். நாம் கேள்வி எழுப்பினப் பிறகு பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்றனர். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இதில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது என்று உறுதி கொடுங்கள்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.