தனுஷின் "ராயன்" திரைப்படம்: சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!
தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
கடந்த வாரம் ‘ராயன்’ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை மறுநாள் ‘ராயன்’ திரைப்படம் வெளியாகயுள்ள நிலையில் இதுவரை ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், இப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Namma kannuku theriyadha innoru ulagatha paaka ready-ah? 👀💥#Raayan in cinemas from July 26 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna… pic.twitter.com/T81YORnHq5
— Sun Pictures (@sunpictures) July 24, 2024
இந்நிலையில், ராயன் திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (ஜூலை 26) காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஐந்து காட்சிகள் திரையிடப்படவுள்ளன. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.