#Maharashtra முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. காரணம் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜக 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என உறுதியாக இருந்தது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறி வந்தது.
ஆனால் அதிக இடங்களை கைப்பற்றியவருக்குதான் முதலமைச்சர் பதவி எனவும், ஏக்நாத் ஷிண்டேக்கு துணை முதலமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என பாஜக உறுதியாக இருந்தது. மேலும் துணை முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஏற்க முடியாமல் போனால், அவர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பையும் பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணியளவில் மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்கிறார். மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.