தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: 'கதவு திறந்ததும் கடல்' மற்றும் 'தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்' | சிறந்த பதிப்பகம்: 'ஹெர் ஸ்டோரிஸ்'
2022ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகத்திற்கான விருதுகளை தமிழ்நாடு அரசு இன்று வழங்கி சிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதற்கான விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் சிறந்த நூல்களை வெளியிடும் பதிப்பகத்தையும் தேர்வு செய்து விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகத்திற்கு சென்னை இசைக் கல்லூரி வளாகத்தில் இன்று மாலை 6 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
இதன்படி, பிருந்தா சேது எழுதிய 'கதவு திறந்ததும் கடல்' நூலும், மதுமிதா தொகுத்த 'தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்' நூலும் 2022ம் ஆண்டின் சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து பிருந்தா சேது மற்றும் மதுமிதா ஆகியோர் இதற்கான விருதினை பெற்றுக் கொண்டனர்.
மேலும் சிறந்த பெண்ணிய படைப்பை வெளியிட்டதற்காக 'ஹெர் ஸ்டோரிஸ்' பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பதிப்பகத்தின் உரிமையாளர்கள் வள்ளிதாசன் மற்றும் நிவேதிதா லூயிஸ் ஆகியோர் அந்த விருதினை பெற்றுக் கொண்டனர். இதே போன்று மேலும் தேர்வான பிற நூல்களின் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நிறைவாக விருது பெற்ற அனைவரும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.