கர்நாடக சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் சி பாடலை பாடிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார்!
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கடந்த ஜூன் 4 ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியான பாஜக பெங்களூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக டி.கே.சிவகுமார் மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்தனர். மேலும் அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டி.கே. சிவகுமார் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
இந்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.க.சிவகுமார் பாஜகவின் விமர்சனங்களை நிராகரித்தார். மேலும் அவர் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் இது போன்ற குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அப்போது அவர் திடீரென பாஜகவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சின் கீதமான 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார். இதனால் எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் பற்றி குறிப்பிட்டதற்காக காங்கிரஸ் கட்சி பிரதமரை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் கர் நாடக காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் சின் பாடலை பாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.