மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - பொதுமக்கள் ஏமாற்றம்!
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான இன்று புத்தாண்டு கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மாநகரில் மொத்தம் 18,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை பகுதிகளில் மது அருந்தக்கூடாது எனவும் அதையும் மீறி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தியாகராய நகர் கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இந்த புத்தாண்டில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக தியாகராய நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளதால், விருப்பப்பட்ட பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்