100க்கும் மேற்பட்ட மசூதிகள் இடிப்பு - சீன அரசு மீது குற்றச்சாட்டு.!
சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகளை அகற்றும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு சீனாவைச் சேர்ந்த நிங்ஸியா மற்றும் கன்சு மாகாணங்களில் தான் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் முஸ்லீம் சமூகத்துக்கு சொந்தமான மசூதிகளை இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியுட்டுள்ள தரவுகளின்படி, நிங்ஸியா, கன்சு மாகாணங்களில் மசூதிகளின் எண்ணிக்கையை சீன அரசு கணிசமாக குறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி அமைந்தததைத் தொடர்ந்து, சீனாவின் மத மற்றும் இன ரீதியிலான சிறுபான்மையினர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சீன பாரம்பரியம் அல்லாத சமூகத்துக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை இடித்து அதன் வடிவங்களை மாற்றுவதில் சீன அரசு ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
முஸ்லீம்கள் தொடர்பான மத ரீதியான இடம் மற்றும் கட்டடங்கள் கட்டப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு நேரடியாக சீன அரசு சார்பில் கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிங்ஸியா பகுதியிலுள்ள இரண்டு கிராமப் பகுதிகளில் செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 6 மசூதிகளின் வட்ட வடிவிலான மினார் என அழைக்கப்படும் மேற்கூரை அகற்றப்பட்டது, மேலும் 4 மசூதிகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், 3 மசூதிகள் முழுவதுமாக இடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
நிங்ஸியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 1,300 மசூதிகள் உள்ளன. சீனாவில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் மக்கள் வாழ்வது இப்பகுதியில்தான். 2020ஆம் ஆண்டுவரை சீனாவில் பதிவாகியுள்ள மசூதிகளின் எண்ணிக்கையில் மூன்று பங்கு நிங்ஸியாவில் உள்ளன.
அப்பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட அல்லது இடிக்கப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அரசு ஆவணங்களில் உள்ள தரவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கலாம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.