குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் வைத்த கோரிக்கைகள்!
குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள், துறை சார்ந்த அமைச்சர்களிடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது மற்றும் விவாதங்கள் நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்படுவது குறித்து திருச்சி சிவா எம்பி, பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து பின்வருமாறு பேசியுள்ளார்.
“பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்கு வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை. யாராவது கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். அந்த பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றால் இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். “When power increases, responsibility increases” என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மணிப்பூர் கலவரம், அதானி மேல் அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உத்திரபிரதேசத்தில் சம்பல் பகுதியில் தொடரும் இரு பிரிவினருக்கிடையிலான சண்டை என நாங்கள் எந்த விவாதத்தை தொடங்கினாலும் அதை பேச அவைத்தலைவர் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைக்கிறார். அதானி விசயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.”
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க கனிமொழி எம்பி கோரிக்கை
கடலோர காவற்படையினரால் லட்சத்தீவுகளின் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யவும், குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி கண்டுபிடித்து தரக் கோரியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பது குறித்து ஆர். கிரிராஜன் எம்பி கேள்வி
பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் கேட்டு மாநிலங்களவையில் கிரிராஜன் எம்பி கேள்வி எழுப்பினார்.
தொழிலாளர் நலனுக்கான திட்டங்களின் செலவு பயனீட்டாளர் விவரம் குறித்து கதிர் ஆனந்த் எம்பி கேள்வி
மத்திய அரசின் தொழிலாளர் நலனுக்காக, மத்திய திட்டங்களில் செலவு பயனீட்டாளர் விவரம் குறித்து மத்திய அரசிடம் கதிர் ஆனந்த் எம்பி பின்வரும் கேள்விகளை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு உட்பட தொழிலாளர் நலனுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் மத்தியத் துறைத் திட்டங்களின் விவரங்கள் யாவை?
ஒதுக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் கடந்த ஐந்து வருடங்கள் மற்றும் நடப்பு காலத்தில் மேற்கண்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆண்டு வாரியாக, திட்ட வாரியாக மற்றும் மாவட்ட வாரியாக விவரம் தருக?
மேற்கூறிய காலக்கட்டத்தில் தமிழ்நாடு உட்பட மேற்கண்ட திட்டங்களின் மூலம் பயனடைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு போதுமான நிதியுதவியை வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
USOF நிதி பயன்பாடு குறித்து கனிமொழி எம்பி கேள்வி
கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளுக்கு உயர்தர டிஜிட்டல் சேவைகள் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட The Universal Service Obligation Fund (USOF) நிதி பயன்பாடு குறித்து, இந்நிதி தொடங்கப்பட்டது முதல் இதுநாள்வரை பெறப்பட்ட சேவை வரியின் விவரம் மற்றும் பெறப்பட்ட நிதியை பயன்படுத்திய திட்டங்களின் விவரங்களையும் கேட்டு கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்தியா கூட்டணி எம்பிகள் சந்திப்பு
இன்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இரயில்வே வாரிய தலைவருக்கு ச. முரசொலி எம்பி கோரிக்கை
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி டெல்லியில் உள்ள ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமாரை சந்தித்து, சென்னை, எழும்பூர், காரைக்குடி, கம்பன் விரைவு வண்டியினை மீண்டும் இயக்குவது, அதிராம்பட்டினம், பூதலூர், ஆலக்குடி, அய்யனாபுரம், நீடாமங்கலம், பாபநாசம் ஆகிய ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்களை நிறுத்தம் செய்வது, திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயிலினை நிரந்தரமாக தினசரி இயக்குவது, மன்னார்குடி முதல் சென்னை வரை தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்குவது மற்றும் தொகுதிக்குட்பட்ட ரயில்வே சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார்.
வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து எம்.எம். அப்துல்லா எம்பி கேள்வி
ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தின்கீழ் திடக்கழிவுகளை கையாள்வதற்காக நிறுவப்பட்ட வசதிகளை மேம்படுத்த, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகளை மாநிலம் மற்றும் ஆண்டு வாரியாக வெளியிடுமாறு கேட்டு எம்.எம். அப்துல்லா எம்பி கேள்வி எழுப்பினார்.
PM-KUSUM திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட சோலார் பம்புகளின் விவரங்களை கோரி அ. மணி எம்பி கேள்வி
PM-KUSUM திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட சோலார் பம்புகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் வாரியாக வெளியிட மக்களவையில் திரு அ. மணி எம்பி கோரியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சோலார் பம்ப் நிறுவுவதற்கான இலக்கில் இதுவரை எட்டப்பட்ட இலக்கின் அளவு, மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான மானியக் கட்டமைப்பு விவரம் மற்றும் சோலார் பம்புகள் அமைப்பது குறித்த கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளார்.