ஐபிஎல் 2024 | ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 55 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் – ஜேக் ஃப்ரேசர் இணை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. குறிப்பாக ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து விளாசினார். இதையடுத்து, 5ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அக்சர் படேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 15 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய குல்பாடின் 19 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு டெல்லி அணி 221 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். சாம்சன் 86 ரன்களிலும் பராக் 27 ரன்களிலும் வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களும் ரியான் பராக் 27 ரன்களும் சுபம் துபே 25 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், கலீல் அஹமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.