#Delhi | தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதம்!
தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி டெல்லியில் தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், செம்மொழி என்ற தனிச்சிறப்பை பெற்றவை வெகுசில மொழிகளே. அந்தவகையில், இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக செம்மொழி என்ற தனிச்சிறப்பை பெற்றது தமிழ் மொழி தான். கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார்.
இந்த சூழலில், தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி, டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தில் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் , புலவர்கள் கலந்துகொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடவும் வலியுறுத்தினர்.