For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி சலோ போராட்டம்: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்!

05:37 PM Feb 23, 2024 IST | Web Editor
டெல்லி சலோ போராட்டம்  கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்
Advertisement

டெல்லியில் இளம் விவசாயி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனால், தடுப்புகளை தகர்த்தெறிந்து டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்தனர். அப்போது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். சாக்குப் பைகளை முகத்தில் கட்டியவாறு, கண்ணீர் புகையின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டே, விவசாயிகள் தடுப்புகளை கடந்து வர முயற்சித்தனர். ஆனால், அடுத்தடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இதனிடையே, கடந்த 18-ந் தேதி, விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா,  பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் கொடுக்கும் விதமாக, போராட்டத்தை நிறுத்திவிட்டு, எல்லையிலேயே விவசாயிகள் தங்கினர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் பஞ்சாப்-ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயதான இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.

இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்தார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்களுக்கு விவசாயிகள் நிறுத்தி வைத்தனர். வரும் 26-ம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சுப்கரன் சிங்கின் குடும்பத்துக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்துள்ள விவசாயியின் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், விவசாயிகள் டெல்லி எல்லையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஹரியாணா முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

விவசாயிகள் அமைப்பு தலைவர் சர்வன் சிங் பாந்தர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “விவசாயி சுப்கரன் சிங் மறைவு தொடர்பாக நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை பஞ்சாப் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. உரிய இழப்பீடு தரப்படும் என்றும் அவரது மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து 14 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது வருத்தத்துக்குரியது” என்றார்.

Tags :
Advertisement