Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘டெல்லி சலோ’ போராட்டம் - மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

11:42 AM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி சலோ’  போராட்டத்தில் பங்கேற்க ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13 ஆம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், 4 கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.  தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களுடன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.  இந்நிலையில், ஜியான் சிங் (78) என்பவர் பிப்ரவரி 15-ம் தேதி ஹரியான - பஞ்சாப் எல்லைப் பகுதியான ஷம்புவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை அடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் மஞ்சித் சிங் (70), நரிந்தர்பால் சிங் (45) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

ஷம்புவில் குவிந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தி, கூட்டத்தை கலைக்க விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். அதேபோன்று, பஞ்சாப் அருகே கானெரியிலும் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 22 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு! 

இதையடுத்து, நேற்று(பிப்.23) போராட்டத்தில் பங்கேற்ற 62 வயதான தர்ஷன் சிங் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று போராட்டத்தை முன்னிட்டு ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் பகுதியச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நடப்பாண்டில் ‘டெல்லி சலோ’ போராட்டக் களத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
DelhiDelhi Chalofarmersfarmers protest 2024haryanaProtestsPunjab
Advertisement
Next Article