டெல்லி மழையில் பிரேக் டவுன் ஆன ரோல்ஸ் ராய்ஸ் கார் - வீடியோ வைரல்!
டெல்லியில் பெய்த மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பல கார்கள் செல்லும் நிலையில், பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நடுவழியில் நின்றது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், சாலைகளிலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இந்நிலையில், சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ஒன்று தண்ணீர் தேங்கிய சாலை ஒன்றில் பழுதாகி நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சர்வ சாதாரணமாக பிற வாகனங்கள் தேங்கி நிற்கும் மழைநீரில் சென்று கொண்டிருக்க ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டும் பழுதாகி நிற்கும் காட்சிகளை நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இன்ஸ்டகிராமில் நெட்டிசன் ஒருவர் இந்த காட்சிகளை பகிர்ந்து, காரின் விலை முக்கியம் இல்லை. நாம் விரும்பும் நேரத்தில் செல்ல வேண்டும் அதுதான் முக்கியம். ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நிற்பதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
"This is why I'm not buying a Rolls Royce." 😅 pic.twitter.com/hlhomEavhQ
— Rattan Dhillon (@ShivrattanDhil1) July 1, 2024
ரோல்ஸ் ராய்ஸ் காருடன் மேலும் சில இரு சக்கர வாகனங்களும் பழுதாகி நிற்கின்றன. அதேவேளையில் பல வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்தபடி சென்று கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மஹேந்திரா தார் இந்த காரை இழுத்து செல்ல வந்து கொண்டிருக்கிறது என பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
உலக அளவில் மிகவும் மதிப்பு மிக்க கார்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆன இந்த காரின் விலை ரூ.6.95 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி வரை இருக்கும். 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் டோர்கள் என பல்வேறு சொகுசு வசதிகள் இந்த காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.