ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆவணங்களை என்ஐஏ கேட்டுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இந்நிலையில் மார்ச் 9 ஆம் தேதி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் கடத்தல் மூலம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் என்ஐஏ-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்கு சென்றுள்ளதா? என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.