மனைவி பாயலிடம் விவாகரத்து கோரிய உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அம்துல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது மனைவி பாயலிடம் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், மனைவி பாயல் கொடுமை செய்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளதை உமர் அப்துல்லாவால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உமர் அப்துல்லா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, இந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பாயலிடம் இருந்து விவாகரத்து கோரும் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் - சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு
மேலும், ஒவ்வொரு மாதமும் பாயலுக்கு ரூ.1.5 லட்சத்தை வழங்க வேண்டும் என்றும், தனது இரண்டு மகன்களின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதேபோல், தான் வசிக்கும் வீட்டிற்கான வாடகையை செலுத்துவதற்கான பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற பாயலின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.